சத்திரத்தில் 'ஸ்பாட் புக்கிங்' வண்டி பெரியாறில் 'டோக்கன்'

மூணாறு: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சத்திரத்தில் ' ஸ்பாட் புக்கிங்' கை எளிமைப்படுத்தும் வகையில் வண்டிபெரியாறில் டோக்கன் வழங்கப்படுகிறது.

கேரளா இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம், புல்மேடு காட்டு பாதையில் சபரிமலைக்கு செல்லலாம். இந்த வழியை பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக சத்திரத்தில் ' ஸ்பாட் புக்கிங்' நடக்கிறது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்ததால் ' ஸ்பாட் புக்கிங்' கை எளிமைப்படுத்தும் வகையில் வண்டிபெரியாறில் போலீசார் சார்பில் டோக்கன் வழங்கப்படுகிறது.

அதை வாங்கி செல்லலாம். வண்டிபெரியாறு அருகே ஹாரிசன் மலையாளம் கம்பெனியின் வாளார்டி எஸ்டேட் வாகனங்கள் நிறுத்தும் மைதானத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வண்டி பெரியாறில் மினி ஸ்டேடியத்தில் கடந்த சபரிமலை சீசன் வரை பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. அதனால் ஊராட்சி நிர்வாகத்தின் தலையிட்டால் கம்பெனி நிர்வாகம் வாளார்டி எஸ்டேட்டில்பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு மைதானம் வசதி செய்து கொடுத்தது.

எனினும் அங்கு நிறுத்தாமல் ரோட்டோரங்களில் நிறுத்தி வருகின்றனர். அதனால் வண்டிபெரியாறில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை தவிர்க்க மைதானத்தில் வாகனங்களை நிறுத்த ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

Advertisement