பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது


சென்னை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் 22வது நாளாக போராட்டம் நடத்திய ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து, அவரவர் சொந்த மாவட்டத்திற்கு அழைத்து சென்று விட்டு வந்தனர். அத்துடன் பலரை வீட்டு காவலில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 22வது நாளை எட்டியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையிலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் அருகே கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

Advertisement