ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது விருந்து; 4 டாக்டர்கள் உட்பட 5 பேர் 'சஸ்பெண்ட்'

1

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அறையில் வைத்து ஆங்கில புத்தாண்டை யொட்டி மது குடித்த பிரச்னை தொடர்பாக பணியில் இருந்த 4 டாக்டர்கள் உட்பட 5 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

கல்லல் அருகேயுள்ள செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை, சித்தா பிரிவு, பல் மருத்துவம், தொழு நோய் பிரிவு உள்ளிட்டவை செயல்படுகிறது.

டிச. 31ம் தேதி இரவு விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞர்கள் சிலர், இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். டாக்டர் இல்லாததால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு கட்டிலில் சிலர் மதுபானம் குடித்து சிக்கன் உட்பட பல்வேறு உணவு சாப்பிட்டு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடி இருப்பது தெரியவந்துள்ளது. மது கொண்டாட்டத்தை, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலானது.

இது சம்பந்தமாக விசாரணை செய்த மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் சசிகாந்த், கவுஷிக், நவீன்குமார், மணிரத்னம் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு நர்ஸ் மற்றும் ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement