நைஜரில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி; பெண்கள், குழந்தைகள் கடத்தல்

1

நைஜர்: நைஜர் நாட்டின் கிராமப்பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள், குழந்தைகள் என பலரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; நைஜரின் போர்கு பகுதியில் அமைந்துள்ள கசுவான் - தஜி கிராமத்தில் நேற்று மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் கிராமவாசிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும், அங்குள்ள மார்க்கெட் மற்றும் வீடுகளுக்கு தீவைத்துள்ளனர். இதில், 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல கிராம மக்களை கடத்தியும் சென்றுள்ளனர், எனக் கூறினர்.

மேலும், பதற்றத்தை தணிப்பதற்காகவும், கடத்திச் சென்றவர்களை மீட்பதற்காகவும் பாதுகாப்பு படையினர் கசுவான் -தஜி கிராமத்திற்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், போலீசார் வெளியிட்ட இந்த தகவலை கிராம மக்கள் மறுத்துள்ளனர். சம்பவம் நடந்து மறுநாளாகியும், பாதுகாப்பு படையினர் யாரும் வரவில்லை என்றனர். மேலும், மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்ததாகவும், பெண்கள், குழந்தைகள் என பலர் கடத்தி செல்லப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுடன் எல்லையைப் பகிரும் அண்டை நாடு தான் நைஜர்.

Advertisement