பயன்பாடின்றி வீணாகும் சுகாதார வளாக கட்டடம்

ரிஷிவந்தியம்: மையனுாரில் பயன்பாடின்றி வீணாகி வரும் சுகாதார வளாக கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும், பல்வேறு தொற்று நோய்களும் பரவும். இதை தடுக்கும் பொருட்டு, மின்மோட்டார், குளியலறை, கழிப்பறை, துணி துவைக்கும் வசதியுடன் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

வாணாபுரம் அடுத்த மையனுார் கிராமத்தில் துாய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டு ரூ.3.50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாக கட்டடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் இக்கட்டடத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால், மையனுாரில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

முறையான பராமரிப்பு இல்லாதததால் கட்டடத்தை சுற்றி செடிகள் வளர்ந்து, காட்சி பொருளாக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தாதால் கட்டடத்தில் உள்ள மின்சாதன பொருட்கள், மின்மோட்டார், மினிடேங்க் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி வருகிறது.

எனவே, சுகாதார வளாக கட்டடத்தை சுற்றியுள்ள செடிகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement