சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 11 பேர் சரண்; உருவானது நக்சல் இல்லாத முதல் கிராமம்!

2

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள படேசெட்டி கிராமம், முதல் நக்சல் இல்லாத கிராமமாக மாறியுள்ளது.


இந்தியாவில் நக்சலிசம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக வேரறுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரமடைந்தது. சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியுள்ள நக்சல்களை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.


இதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான சிபிஐ மாவோயிஸ்டின் மத்திய குழு உறுப்பினராக இருந்த பசவராஜ், சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார்.
ஆந்திராவில் நடந்த தேடுதல் வேட்டையில், அந்த அமைப்பின் முக்கிய தளபதியான மாத்வி ஹித்மா, அவரது மனைவி உட்பட ஆறு பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். நக்சல் அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் பலர், ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண் அடைய துவங்கினர்.


சரண் அடைந்த நக்சல்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி உதவி தொகை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
நக்சல் பாதிப்புள்ள கிராமங்களில் மக்கள் தாங்களாகவே நக்சலைட்டுகளைச் சரணடையத் தூண்டினால், அந்த பஞ்சாயத்துக்கு 1 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள படேசெட்டி கிராமம், மாநிலத்தின் முதல் நக்சலைட் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிரமாகச் செயல்பட்டு வந்த 11 நக்சலைட்டுகள் ஒரே நேரத்தில் சரணடைந்தனர்.


இந்த கிராமத்தின் வளர்ச்சி பணிகளுக்காகச் சத்தீஸ்கர் அரசு 1 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கியுள்ளது. சரணடைந்த 11 நக்சலைட்டுகளுக்கும் தலா 50,000 ரூபாய் உடனடி நிதியுதவி மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் குண்டுச் சத்தமும், நக்சலைட்டுகளின் மிரட்டலும் நிறைந்திருந்த இந்த கிராமத்தில், தற்போது அமைதி திரும்பியுள்ளது.


சுற்றி உள்ள 8 குக்கிராமங்களில் 6 இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 8ம் வகுப்பு வரை மட்டுமே இருந்த பள்ளி, தற்போது தரம் உயர்த்தப்பட உள்ளது. கிராமத்திலேயே ஆதார் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement