ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: ஈரானில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், அங்குள்ள இந்திய குடிமக்களுக்கு தேவையானவற்றை செய்ய உறுதி பூண்டுள்ளோம் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.
டில்லியில் அவர் அளித்த பேட்டி;
தற்போது 9000 இந்தியர்கள் ஈரானில் வசிக்கின்றனர்.அவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள். அங்கு தற்போதுள்ள சூழல்களை கண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம்.
நடப்பதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ளவர்கள் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கிடைக்கக்கூடிய எந்த வசதியையும் பயன்படுத்தி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறி இருக்கிறோம்.
அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறோம். தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையானவற்றை செய்வதில் உறுதி பூண்டுள்ளோம். ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலையை தெளிவுபடுத்தி விட்டோம்.
இவ்வாறு ரந்திர் ஜெய்ஸ்வால் பேட்டி அளித்தார்.