29 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வுதான் டி.எஸ்.பி., கனவில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

மதுரை: தமிழக போலீஸ் துறையில் 1997ல் நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 29 ஆண்டுகளில் 'சீனியாரிட்டி' குழப்பம், நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களால் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., பதவி உயர்வு எட்டாக்கனியாக இருப்பதாகவும், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும் இன்ஸ்பெக்டர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இத்துறையில் 1997ல் 737 பேர் எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதற்கட்டமாக 590 பேர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். 1997ல் பணியில் சேர்ந்து விடுபட்ட 157 பேரும், 1996ல் சேர்ந்த 96 பேரும் நீதிமன்ற உத்தரவால் பயிற்சி பெற்றனர். சிலருக்கு மதிப்பெண் குறைந்ததால் 'சீனியாரிட்டி' பாதித்தது. அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதனால் டி.ஜி.பி., அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் எந்த உத்தரவுமின்றி 'சீனியாரிட்டியை' சரிசெய்தனர்.

இதனால் தங்களுக்கு 'சீனியாரிட்டி' பாதிக்கிறது என்றுக்கூறி 2000ல் பயிற்சி பெற்றவர்கள், 2009 ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 1999 பேட்ச் தனி, 2000ம் ஆண்டு பேட்ச் தனி. இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது என்று கூறப்பட்டது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை பொறுத்து மாற்றியமைக்கப்படும் எனக்கூறி 1999 பேட்சை 'சீனியாரிட்டி' பட்டியலில் முன்னால் வைத்து தற்காலிகமாக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் 'இருபேட்சையும் இணைத்தது தவறு. முதலில் பணியில் யார் சேர்கிறார்களோ அவர்களுக்கே பணிமூப்பு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமல் அரசு தொடர்ந்து பணி மூப்பு பட்டியலை ஒன்றாக இனைப்பதில் முனைப்பாக இருந்தது. இதற்கிடையே டி.ஜி.பி.,யாக இருந்த டி.கே. ராஜேந்திரன் உத்தரவுபடி, இரு பேட்ச்களையும் சேர்ந்தவர்கள் பயிற்சியின் போது பெற்ற மதிப்பெண் மூலம் ஒன்றிணைத்து பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'இந்த உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்தடுத்து வந்த டி.ஜி.பி.,கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் 'சீனியாரிட்டி' பாதித்து டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சிலர் கூறியதாவது: நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர்கள் சர்வீஸ் அடிப்படையில் எஸ்.பி., பதவி வரை வரமுடியும். ஆனால் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். நாங்கள் டி.எஸ்.பி., பதவியை தாண்டி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். 'சீனியாரிட்டி' தொடர்பான வழக்குகளில் அரசை குழப்பி மெத்தன போக்காக இருக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதற்கு சில அமைச்சு பணியாளர்களும் உடந்தை. 29 ஆண்டுகளில் இதுவரை இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு மட்டுமே பெற்றுள்ளோம். டி.எஸ்.பி., பதவி உயர்வு எட்டா கனியாக உள்ளது என்றனர்.

Advertisement