குஜராத்தில் தீவிரமாக பரவும் டைபாய்டு காய்ச்சல் 5 நாளில் 100 பேர் பாதிப்பு

1

காந்திநகர்: குஜராத்தில் வேகமாக பரவி வரும் 'டைபாய்டு' காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அசுத்தமான குடிநீரை பருகியதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. நாட்டிலேயே துாய்மையான நகரங்களில் பட்டியலில் குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்த சூழலில், அம்மாநில தலைநகரான காந்திநகரில், அசுத்தமான குடிநீரால் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 22 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கண்காணிக்க மாவட்ட துணை கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில், டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் பலர் உடல்நலம் தேறி வருவதாக, அரசு மருத்துவமனை சுகாதார கண்காணிப்பாளரான டாக்டர் மீட்டா பாரிக் தெரிவித்துள்ளார்.

காந்திநகரில், கடந்த ஐந்து நாட்களில் டைபாய்டு காய்ச்சல் வேகமாக பரவியதற்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காந்திநகர் தொகுதி எம்.பி., யான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

@block_B@ சிகிச்சை அளிக்க ஏற்பாடு குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளதாவது: தற்போது வரை 104 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரித கதியில் செய்து வருகிறது. நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. உள் நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கி இருக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டரும், நகர மேயரும் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement