நைஜீரியாவில் துப்பாக்கி சூடு 30க்கும் மேற்பட்டோர் பலி

மின்னா: நைஜீரியாவில் ஆயுதப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தின் போர்கு மாவட்டத்தில் உள்ள கசுவான் - டாஜி கிராமத்துக்குள், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர் குழுவினர் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கண்ணில் பட்டவர்களை சரமாரியாக அவர்கள் சுட்டதில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலின்போது, அங்கிருந்த வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சந்தையும் எரிக்கப்பட்டதால் அங்கிருந்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின. தாக்குதலின் முடிவில், கிராமத்தில் வசித்து வந்த குழந்தைகள் உள்ளிட்ட பலரை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர்.

கடந்தாண்டு நவம்பரில், கசுவான் - டாஜி கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், 300க்கும் மேற்பட்டவர்களை கடத்தி சென்றனர்.

அரசுக்கு எதிராக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை அடக்க நைஜீரிய படைகள் போரிட்டு வருவதால், கிராமப்புறங்களில் அந்நாட்டு அரசால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட முடியாத சூழல் நிலவுகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சியாளர்கள், கிராமப்புறங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக, பணத்திற்காக ஆட்களை கடத்துவது, துப்பாக்கி சூடு நடத்துவது, கொள்ளை அடிப்பது போன்ற செயல்களில் கிளர்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

Advertisement