வெனிசுலாவில் நடப்பது கவலை தருகிறது: மத்திய அரசு

'வெனிசுலாவின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன; அனைத்து தரப்பினரும் பேச்சு நடத்தி அமைதியான முறையில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என நம் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் நேற்று முன்தினம் நுழைந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மாளிகைக்குள் நுழைந்து அவரையும், அவரது மனைவியையும் அமெரிக்க வீரர்கள் கைது செய்தனர்.

இந்த தாக்குதலில் வெனிசுலா படையினர், பொதுமக்கள் என 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, வெனிசுலா அதிபரும் அவர் மனைவியும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெனிசுலாவின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. நிலைமையின் வளர்ச்சியை நாங்கள் நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

அனைத்து தரப்பினரும் பேச்சு நடத்தி அமைதியான வழியில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கரகாசில் உள்ள இந்தியத் துாதரகம் வெனிசுலாவில் உள்ள இந்திய மக்களுடன் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

- நமது நிருபர் -.

Advertisement