75 வயதுக்கு பின் குழு மருத்துவ காப்பீட்டை நீட்டிக்க முடியுமா?

எல்.ஐ.சி.,யில் 'தரங்' என்ற திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு 20 ஆண்டு காலத்துக்கான பாலிசியை எடுத்துள்ளேன். கடைசி தவணையாக 10,044 ரூபாயையும் செலுத்தி விட்டேன். எனக்கு அடுத்த ஆண்டு எவ்வளவு தொகை கிடைக்கும்? அடுத்த ஆண்டு பாலிசியை முடித்து பணத்தை பெறுவது சரியா? அல்லது 99 வயது வரை தொடர்வது சரியா?

-ராஜேஷ்



ஒரு குறிப்பிட்ட ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் முதிர்வு தொகை மரண பலன்கள் அல்லது சரண்டர் மதிப்பு குறித்து சரியான பதில் அளிப்பது அந்த காப்பீட்டு நிறுவனமே. ஏனெனில், இதற்கு பல காரணிகள் உள்ளன.

உதாரணமாக,





* காப்பீட்டில் கடன் எடுத்துள்ளீர்களா

* அனைத்து பிரீமியங் களும் காலத்துக்குள் செலுத்தப்பட்டுள்ளனவா

* சரண்டர் மதிப்பு கிடைக்க தேவையான காலம் முடிந்துள்ளதா

* அந்த பாலிசி திட்டத்தின் எண் போன்ற விபரங்கள்

இவை அனைத்தையும் பொறுத்தே தொகை மாறும். எனவே, உங்கள் பாலிசி விபரங்களுடன் அருகிலுள்ள எல்.ஐ.சி., கிளையை அணுகி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்புவது சிறந்தது.


உங்கள் பாலிசி பத்தி ரத்தை பார்த்து தோராயமாக நீங்களே கணக்கிடலாம்.


காப்பீடு துறையில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கிறது. பணி வாய்ப்பு பற்றி விளக்கமாக கூறுங்கள்.

- பிரபு, நிலக்கோட்டை, திண்டுக்கல்



இந்திய காப்பீட்டு துறை மிகவும் பெரியதும், நீண்ட காலமாக இயங்கி கொண்டிருப்பதுமாகும். இதில், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கள் நிறைய உள்ளன.

குறிப்பாக, 'எல்.ஐ.சி., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளன.

இவற்றில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு, காலங்காலமாக அகில இந்திய போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியாகும்.

அதிகாரிகளுக்கான பணிகளுக்கு முதல் வகுப்பு பட்டதாரி, உதவியாளர்களுக்கு மேல்நிலை பள்ளிக்கல்வி போன்ற கல்வி தகுதிகள் தேவை. இது தவிர, கணக்கு, ஆடிட், ஆக்சுவரியல், சட்டம், பொறியியல் போன்ற சிறப்பு பணிகளுக்கும் தனி அறிவிப்புகள் வெளியாகும்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்களை நியமிக்கின்றன. அவர்களின் இணையதளங் களில் வேலைவாய்ப்பு விபரங்கள் கிடைக்கும்.

இதற்கு பிறகு, கமிஷன் அடிப்படையில் செயல்படும் காப்பீட்டு முகவர் பணியும் உள்ளது. விற்பனை, தொடர்பு, சேவைத்திறன் உள்ளவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.



தற்போது உள்ள என் ஸ்டார் மருத்துவ காப்பீடு, என் மனைவி யால் பிரீமியம் செலுத்தப் பட்டு வருகிறது. அவர், இதில் பயனாளர் இல்லை. இதை முழுதும் என் பெயருக்கு மாற்ற முடியுமா?

ஸ்டார் காப்பீடு, 'கேஷ்லெஸ்' ட்ரீட்மென்டை மருத்துவமனைகள் நிறுத்தி உள்ளனவா; தீர்வு என்ன?


ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கு வைத்திருக்கும் சீனியர் சிட்டிசன் குரூப் மருத்துவ காப்பீடு, 75 வயதுக்கு பின் நீட்டிக்க என்ன செய்வது?

-எம்.டி.ராஜேந்திரன் தி.நகர், சென்னை



ஆம். மருத்துவமனை காப்பீட்டில் 'புரோப்போசரை' மனைவியிடமிருந்து கணவருக்கு மாற்றலாம். இதற்கான நடைமுறைகள் குறித்து காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். புதுப்பிப்பு நேரத்தில் இதை செய்வது சிறந்தது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே செயல்முறையை துவங்குங்கள்.

காப்பீடு செய்யப்பட்டவர் ஒரே நபராக இருப்பதால், கிளெய்ம் கோராததற்கான போனஸ், காத்திருப்பு காலம், முன்பே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் ஆகியவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

'ஸ்டார் ஹெல்த்' காப்பீட்டின் 'கேஷ்லெஸ்' வசதி தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. ஆனால், பின்னர் தீர்வு காணப்பட்டு சேவை மீண்டும் துவங்கப்பட்டது.

குழு காப்பீட்டு திட்டங்களில் வயது வரம்பு உள்ளிட்ட நிரந்தர விதிமுறைகள் இருக்கும். 75 வயதிற்கு மேல் நீட்டிப்பு இல்லை என்றால், தனிநபர் மருத்துவ காப்பீட்டை எடுத்துக்கொள்ள முயலுங்கள்.

இதன் வாயிலாக, 'வெயிட்டிங் பீரியெடு' போன்ற நன்மைகள் தொடர வாய்ப்பு உள்ளது.

Advertisement