அமெரிக்காவின் அட்டூழியத்தால் நாடுகள் சந்தித்த பேரழிவு!

17

வாஷிங்டன்: உலகில் ஏதாவது ஒரு நாடு தனக்கு எதிராக அல்லது தன் நலன்களுக்கு தடையாக இருக்கிறது என கருதினால், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே அமெரிக்கா மாற்றி விடுகிறது. இதற்காக, அந்நாடு எப்போதும் ஒரே மாதிரியான வழிமுறைகளையே பின்பற்றுகிறது.


முதலில், சம்பந்தப்பட்ட நாட்டின் மீது, ஆயுதங்களை குவித்துள்ளனர், பயங்கரவாதிகளை வளர்க்கின்றனர், போதைப் பொருள் கடத்துகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது.


அதன்பின், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள், அதன் தொடர்ச்சியாக ராணுவ தலையீடு அல்லது ஆட்சி கவிழ்ப்பு. இறுதியில், அந்நாட்டில் புதிய அரசை அமைத்து ஜனநாயகத்தை மலர செய்ததாகக் கூறுவர்.

தற்போது, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையாண்டதும் இதே வழிமுறை தான்.


அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த உதவியதாகவும், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும் கூறி வெனிசுலாவுக்குள் புகுந்து, 40 பேரை கொன்று, அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளனர்.



இதற்கு முன் அமெரிக்கா காட்டிய கைவரிசைகள்:


ஆப்கானிஸ்தான்



கடந்த 2001 செப்., 11ல், அல் குவைதா பயங்கரவாதிகள் அமெரிக்காவின் வர்த்தக மையம், ராணுவ தலைமையகமான பென்டகன் உள்ளிட்டவற்றின் மீது விமானங்களை மோத செய்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன்.


அப்போது அவர், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் பாதுகாப்பில் இருந்தார். அவரை ஒப்படைக்க அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் கோரினார்; தலிபான் மறுத்தது.


இதையடுத்து, 2001 அக்., 7ல், 'ஆப்பரேஷன் எண்டியூரிங் பிரீடம்' என்ற பெயரில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆப்கனுக்குள் நுழைந்தன. தலிபான் ஆட்சி துாக்கி எறியப்பட்டது. ஹமீத் கர்சாய் என்பர் அமெரிக்காவின் ஆதரவுடன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஜனநாயகத்தையும், நிலைத்தன்மையையும் அமெரிக்கா கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகால நீண்ட போருக்கு பின், 2021ல் ஆப்கனை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. ஆப்கன் இன்று மீண்டும் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

ஈராக்



கடந்த 2003ல், மேற்கு ஆசிய நாடான ஈராக்கின் அதிபராக இருந்தவர் சதாம் உசைன். இவர், அணு ஆயுதங்கள் உட்பட பெரிய அளவிலான நாசகார ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குற்றஞ்சாட்டினார்.


இந்த ஆயுதங்கள் அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். ஈராக்கில் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என, ஐ.நா., ஆய்வாளர்கள் கூறினர். எனினும் ஐ.நா.,விடம் தெரிவிக்காமல், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஈராக்கிற்குள் 2003 மார்ச் 20ல் நுழைந்தன. அடுத்த சில மாதங்களில் சதாம் உசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


'ஆப்பரேஷன் ரெட் டான்' எனும் ராணுவ நடவடிக்கையின் கீழ், பாதாள அறையில் பதுங்கியிருந்த சதாம் உசைன் கைது செய்யப்பட்டார். அவரை இடைக்கால அரசு துாக்கிலிட்டது.


அமெரிக்காவின் படையெடுப்பால் ஈராக்கில் உள்நாட்டு போர் மூண்டது. ஐ.எஸ்., பயங்கரவாத குழுக்கள் உருவாகின. இதனால், மேற்காசிய பிராந்தியம் இன்றும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.

பனாமா



மத்திய அமெரிக்க நாடான பனாமாவை, 1989ல், ராணுவ ரீதியாக அமெரிக்கா ஆக்கிரமித்தது. போதைப் பொருள் கடத்தல், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் மானுவல் நோரியேகாவை அகற்றியது.

கவுதமாலா



மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், 1954ல், அமெரிக்கா தன் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., மூலம் ஆட்சி கவிழ்ப்பை நடத்தியது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போதைய கவுதமாலா அதிபர் ஜாகோபோ ஆர்பென்ஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆர்பென்ஸின்



நில சீர்திருத்தங்களால் அமெரிக்காவின் யுனைடட் புரூட் கம்பெனி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அமெரிக்க அரசு தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தலையீடு காரணமாக, 1960 - 1990 வரை கவுதமாலாவில் வன்முறை மற்றும் உள்நாட்டு போர் நிலவியது.

ஈரான்



மேற்காசிய நாடான ஈரான் எண்ணெய் வளங்கள் நிறைந்த நாடு. இங்கு 1953ல் பிரதமராக இருந்தவர் முகமது மொசாதிக். இவர், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவர். அவர் ஈரானின் எண்ணெய் வளங்களை அரசுடைமையாக்க முயன்றார். இது பிரிட்டிஷ்- - அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை பெரிதும் பாதித்தது.


இதனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகள் இணைந்து, 'ஆப்பரேஷன் அஜாக்ஸ்' எனும் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு, முகமது மொசாதிக்கை ஆட்சியை விட்டு அகற்றியது.


இது போல் ஒன்றிரண்டு அல்ல, கடந்த 120 ஆண்டுகளில், 35 நாடுகளின் ஆட்சியை அமெரிக்கா தலையிட்டு அகற்றி உள்ளது.


உலகளாவிய இத்தகைய தலையீடுகளில், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவால் நடத்தப்பட்டவை. இதை வெளிநாட்டால் திணிக்கப்பட்ட ஆட்சி மாற்றம் என, அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆட்சி அமைந்த 10 ஆண்டுகளுக்குள், பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு போரை சந்தித்துள்ளன.

Advertisement