முதலீட்டுக்கு நேரம், காலம் கிடையாது!
பங்குச் சந்தை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. அதற் கென்று ஓர் இலக்கணம் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், முதலீடு செய்ய சரியான நேரத்துக்காக காத்திருப்பதை முதலீட்டாளர்கள் தவிர்ப்பர்.
பங்குச்சந்தை எப்போதும் நேர்கோட்டில் நகராது. அது வளைந்து வளைந்து பாம்பு மாதிரித்தான் போகும். ஒவ்வொரு முறையும் பங்குகளின் விலை மிக வேகமாக மேலே உயர்ந்த பின், ஓட்டம் நிதானம் அடையும். ஒவ்வொரு சரிவுக்குப் பின்னரும் சந்தை அடுத்த மேல்நோக்கிய ஓட்டத்துக்குத் தயார் ஆகும்.
இந்த சந்தை ஓட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
'டைம் கன்சாலிடேஷன்' என்னும் கால ரீதியிலான ஒருங்கிணைத்தல் ஒரு கட்டம். இது, 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை கூட நீளும். உண்மையில் முதலீட்டாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் காலகட்டம் இது. பங்குகளின் விலை சட்டென அதிகமாகாது. உயர்ந்தும் சரிந்தும் ஆட்டம் காட்டும். திடீர் விலை சரிவு அடுத்த கட்டம்.
கிட்டத்தட்ட 20 முதல் 40 சதவீதம் வரை கூட பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும். கிட்டத்தட்ட ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் பங்குகளின் மதிப்பும், வருவாய் பற்றிய எதிர்பார்ப்பும் எதார்த்த நிலைக்கு வரும். ஆனால், முதலீட்டாளர்கள், மேலும் சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அத்தனை பங்குகளையும் விற்றுவிடுவர்.
அடுத்ததுதான் மேல்நோக்கிய காளை ஓட்டம். ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை கூட இந்த கட்டம் நீடிக்கலாம். கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத வருவாய் வளர்ச்சியை கா ணலாம். ஒவ்வொரு முறையும் இப்படி தான் நடந்திருக்கிறது என்பதற்கு, நம் முன்னே உள்ள நிப்டி 50 குறியீட்டின் போக்கே சாட்சி.
சுழற்சிகள்
உதாரணமாக, முதல் சுழற்சியில், 2018 ஆகஸ்ட் முதல் 2020 நவம்பர் வரை 27 மாதங்கள் 'டைம் கன்சாலிடேஷன்' நடைபெற்றது. இது நடுவே, 2018 ஆகஸ்ட் முதல் 2020 மார்ச் வரையான காலகட்டத்தில், பங்குச் சந்தை 38 சதவீத அளவுக்கு சரிந்தது. பின்னர், 2020 நவம்பர் முதல் 2021 அக்டோ பர் வரை யான காலகட்டத்தில் காளை ஓட்டம். 59 சதவீத அளவுக்கு பிரமாதமான வளர்ச்சி.
இரண்டாவது சுழற்சியில், 2021 அக்டோபர் முதல் 2023 ஜூன் வரையான 20 மாத காலகட்டம் பயங்கர இம்சை. பொறுமையை சோதித்தது. இதே காலத்தில், 2021 அக்டோபர் முதல் 2022 ஜூன் வரை, 20 சதவீத அளவுக்கு சரிவு வேறு. பின்னர், 2023 ஜூன் முதல் 2024 செப்டம்பர் வரைதான் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. 53 சதவீத அளவுக்கு காளை கொள்ளை லாபம்.
மூன்றாவது சுழற்சி, 2024 செப்டம்பர் துவங்கி இப்போது வரை 15 மாதங்களாக பொறுமையை சோதிக்கும் 'டைம் கன்சாலிடேஷன்' காலகட்டம் நடந்து வருகிறது. இதற்கு நடுவே, 2024 செப்டம்பர் முதல் 2025 ஏப்ரல் வரை 20 சதவீத சரிவையும் சந்தை எதிர்கொண்டது. இப்போது தான் காளை ஓட்டம் ஆரம்பமாவதற்கான அறிகுறி தெரிகிறது.
மூன்று வெற்றி
இந்த சூழ்நிலையில், ''சரியாக நேரம் பார்த்து நான் முதலீடு செய்வேன்; லாபம் பார்ப்பேன்,'' என்று எப்படி சொல்ல முடியும்? அப்படிச் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற வேண்டும் .
அதாவது, பங்குச் சந்தை எந்த அளவுக்குக் கீழே போகும் என்பதைக் கணிப்பது முதல் வெற்றி. அந்த சரியான சமயத்தில் ஒரு பங்கை வாங்குவது இரண்டா வது வெற்றி. அதேபோல், சந்தை எவ்வளவு உயரத்துக்கு போகும் என்று தீர்மானிப்பது மூன்றாவது வெற்றி.
இந்த மூன்று வெற்றிகளையும் ஒருவரால் அடையவே முடியாது என்று தான் பல ஆய்வுகள் சொல்கின்றன. மியூச்சுவல் பண்டு மேலாளர்களால் கூட இதை அடைய முடியாது என்பது தான் உண்மை. ஏனெனில், பொதுவாக பொறுமையை சோதிக்கும் 'டைம் கன்சாலிடேஷன்' காலத்தில் தான் ஒரு பங்கை வாங்க வேண்டும்.
அப்போது தான் முதலீட்டாளர்கள் சோர்ந்து போய், அந்த பங்கை விற்றுவிட்டு வெளியேறி கொண்டிருப்பர். ஆனால் அந்த 'அற்புத பெருநாள்' எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது, தெரியவில்லை.
ஒரு கணக்கு சொல்வர். இது போல் 10 'அற்புத பெருநாள்'களைத் தவறவிட்டால், 20 ஆண்டுகளில் 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் லாபத்தை இழந்து விடுவோமாம்.
இன்னொரு பிரச்னை, எப்போது பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுவது என்பது. காளை ஓட்டம் முடிவதற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டால், எவ்வளவு பெரிய மனக்கஷ்டம், பண இழப்பு என்று யோசித்துப் பாருங்கள்.
இதனால் தான், 'சரியான நேரம் பார்த்து வாங்குவது' என்பது சாத்தியமே இல்லை என்று சொல்கிறோம்.
பெருகும் லாபம்
ஆனால், தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி. வாயிலாக முதலீடு செய்து காத்திருந்தால், அது அள்ள அள்ளப் பணம் கொடுக்கும் என்பதற்கு, கடந்த 2024ம் ஆண்டே அத்தாட்சி.
அந்த ஆண்டு முழுதும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், 20 முதல் 60 சதவீத லாபத்தைப் பார்த்திருப்பார்.
இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம். ஒருவர் கடந்த ஐந்து ஆண்டு காலம் தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி. போட்டிருந்தால் , ஆண்டொன்றுக்கு 10 முதல் 20 சதவீத லாபம் ஒவ்வோர் ஆண்டும் பார்த்திருப்பார்.
கொரோனா, அதற்கு முன்னர் பணமதிப்பிழப்பு காலம், அதாவது ஏழு ஆண்டுகள் முன்பிருந்து தொடர்ச்சியாக முதலீடு செய்திருந்தால், ஆண்டொன்றுக்கு 12 முதல் 18 சதவீதம் லாபம் ஒவ்வோர் ஆண்டும் பெற்றிருப்பார்.
அதாவது, 2018 முதல் 2025 வரையான மூன்று சுழற்சி காலத்திலும், ஒருவர் விடாமல் மாதாமாதம் 10,000 ரூபாய் எஸ்.ஐ.பி., போட்டு வந்திருந்தால், அவருடைய மூலதனம் 2.3 மடங்கு உயர்ந்திருக்கும்.
இங்கே சந்தையில் நேரம், காலம் பார்த்து முதலீடு செய்வது பலன் அளிக்காது. ஓர் ஒழுங்கோடு, கட்டுப்பாட்டோடு, உறுதியோடு ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வந்தால், எல்லா சுழற்சிகளையும் தாண்டி, பணம் பன்மடங்கு பல்கிப் பெருகி இருக்கும் என்பது தான் யதார்த்தம்.
மேலும்
-
மாட்டு வண்டி ஓட்டிய குழந்தை தொழிலாளி மீட்பு
-
பதற்ற ஓட்டுச்சாவடி கண்டறிய ஆலோசனை
-
ஏலதாரர்கள் 'சிண்டிகேட்'டால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
-
அ.தி.மு.க.,வில் விருப்ப மனு வீரபாண்டி தொகுதியில் அதிகம்
-
'சீட்' பெறும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்., அறிவுரை
-
சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பால் அவதி