தி.மு.க., முன்னாள் எம்.பி., எல்.கணேசன் காலமானார்

1

தஞ்சாவூர்: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான எல்.கணேசன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.கணேசன், 92; இவர், 1963ல் மாணவ பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்; மிசாவில் சிறை சென்றவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கருணாநிதியின் நெருங்கிய நட்புறவில் இருந்தவர்.

கடந்த 1967, 1971, 1989ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ., 1982 -- 86 வரை ராஜ்யசபா எம்.பி., 1986ல் எம்.எல்.சி., 2004ல் திருச்சி லோக்சபா எம்.பி., என பதவி வகித்தவர்.

முதல்வரின் பேரவை செயலராக 1989ல் நியமிக்கப்பட்டார். தி.மு.க., தேர்தல் பணிக்குழு தலைவர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர். ஒரத்தநாடு வர்த்தக சங்க கவுரவ தலைவராக இருந்தவர்.

தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க., பிரிந்த போது, வைகோவுக்கு உறுதுணையாகவும், அவை தலைவராகவும் கணேசன் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தி.மு.க.,வில் இணைந்தார். சொந்த ஊரில் ஏழு முறை பஞ்., தலைவராக இருந்தார்.

வயது மூப்பு காரணமாக, உடல்நலக் குறைவால் ஓராண்டாக சிகிச்சை பெற்று, தஞ்சாவூர், பாலாஜி நகர் வீட்டில் ஓய்வில் இருந்தவர் நேற்று அதிகாலை காலமானார்.

கணேசன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கணேசனின் சொந்த ஊரான ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி கீழையூரில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

Advertisement