'டவுட்' தனபாலு

3

காங்., மூத்த தலைவர் சிதம்பரம்: தமிழகத்தை பொறுத்தவரை, 'இண்டி' கூட்டணிதான் ஜெயிக்கும். இக்கூட்டணி மற்ற கூட்டணிகளை காட்டிலும் வலுவாக உள்ளது. இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும், ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றன. அதனால், விஜய் என்ன... வேறு எந்த நடிகர் வந்தாலும், இக்கூட்டணியை எதிர்த்து நிற்க முடியாது.

டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, உங்க கட்சியின் டில்லி தலைவர்களான பிரவீன் சக்கரவர்த்தியும், வேணுகோபாலும் அடிக்கடி தமிழகம் வந்து விஜயை பார்த்து, கூட்டணி பேச்சு நடத்துறாங்களே... கட்சியில் மூத்த தலைவரான உங்களிடம் எல்லாம் கூட்டணி சம்பந்தமா, மேலிட தலைவர்கள் ஆலோசனை கேட்க மாட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பூர் மாவட்டம், வீரராகவ பெருமாள் கோவிலில் போலீசாரை, மது போதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக, தற்போது மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கை சீரழித்துள்ளது, முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம்.

டவுட் தனபாலு: போலீசாரையே வெட்டும் துணிச்சலை அந்த ரவுடிக்கு தந்தது, 'டாஸ்மாக்' மதுபானம் தானே... 'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்'னு சொல்றது மாதிரி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், இந்த மாதிரி குற்றங்கள் குறையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
: தி.மு.க., வலிமையான இயக்கம்; 75 ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆட்சியில் இருக்கும் இயக்கம். அதற்கு நாங்கள் முட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான், தி.மு.க.,வுக்காக பேசவில்லை. நான் உள்வாங்கிய அரசியலுக்காக பேசுகிறேன். சிலருடன் சேர்ந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்; பொருளாதாரத்திலும் மேம்பாடு வரும் என்பதற்காக, கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது.

டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க...? 'ஆளும் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், எங்களுக்கு பொருளாதார ரீதியா எந்த மேம்பாடும் இல்லை... அதனால, வர்ற சட்டசபை தேர்தலில், கணிசமான தொகையை கொடுத்தால் தான் சரியா இருக்கும்'னு தி.மு.க., தலைமைக்கு நாசுக்கா சுட்டிக்காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

Advertisement