தெலுங்கானா, உ.பியில் சாலை விபத்து; 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி

2

நமது நிருபர் குழு




தெலுங்கானா மாநிலத்தில் கார் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் உபியில் டெம்போ மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் இன்று (ஜனவரி 08) கல்லூரி மாணவர்கள் 5 பேர் சென்று கொண்டிருந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



காரை அதிவேகமாக இயக்கியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்தது. இறந்தவர்கள் கார்கயாலா சுமித், 20, ஸ்ரீ நிகில், 20, பால்முரி ரோஹித், 18, மற்றும் தேவலா சூர்யா தேஜா, 20 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்து இருக்கிறது.

இருவர் பலி



அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கக்டா கிராமம் அருகே, டெம்போ மீது அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குல்ஷனா (40), ஆஷிபா (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்



மேலும் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்து இருக்கிறது.

அதிகாலை பயணத்தை தவிருங்கள்



இந்த இரண்டு சாலை விபத்துக்களும் அதிகாலை, நள்ளிரவு நிகழ்ந்து இருக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement