பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழக உயர்கல்வி துறை நடத்திய உதவி பேராசிரியர்கள் தேர்வில், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்டுள்ளனர். 50 மதிப்பெண்களுக்கான ஐந்து கேள்விகளில், தி.மு.க., அரசின் திட்டங்கள் குறித்து எழுதுமாறு கேள்வி கேட்டுள்ளனர். இந்த திட்டங்களை பாராட்டி எழுதினால் தான், தேர்வு செய்வீர்களா?

* 'அரசின் திட்டங்கள் குறித்து தெரியாதவங்க, அரசு வேலைக்கே லாயக்கில்லை' எனக் கருதி, இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டிருப்பாங்களோ?


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: திருத்தணியில், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்ற வாலிபரை, கஞ்சா போதையில் நான்கு இளைஞர்கள் தாக்கி, 'ரீல்ஸ்' எடுத்த சம்பவத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூரஜ் எந்த அறிவிப்பும் இன்றி, சொந்த ஊருக்கு சென்றதன் காரணம் குறித்தும், மனித உரிமை கமிஷன் விசாரிக்க வேண்டும்.

ஒடிஷாவில், இவரது கட்சியான பா.ஜ., ஆட்சி தானே நடக்குது... சூரஜை அங்க தேடி பிடிச்சு, தமிழக போலீசார் மீது புகார் எழுதி வாங்கிட வேண்டியது தானே!


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் பேட்டி: நாமக்கல் மாவட்டம், சின்னமுதலைபட்டியில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி குழியில் விழுந்து, 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். தி.மு.க., அரசின் ஒட்டுமொத்த நிர்வாக சீர்கேடு காரணமாகவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சியில், அதிக கமிஷன் கொடுப்பவர்களுக்குத்தான் கான்ட்ராக்ட் ஒதுக்கப்படுகிறது.

அதிக கமிஷன் கொடுக்கிறவங்களிடம், பணிகளில் தரத்தை எதிர்பார்க்க முடியுமா...? ஏனோ தானோன்னு வேலை செய்வது தான், இந்த மாதிரி விபத்துகளுக்கு காரணம்!


தமிழக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி தலைவர் சத்தியம் சரவணன் பேட்டி: ஏழை, எளிய விவசாய மக்களுக்காகவும், கால்நடை வளர்ப்போரை பாதுகாக்கவும், புதிய கட்சி துவக்கி உள்ளோம். தமிழக அரசு, ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழகம் முழுதும் கோழிக்கறிக்கு விலை நிர்ணயம் செய்வது போல, ஆட்டுக்கறிக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு, சட்டசபை தேர்தலில் ஆதரவு தருவோம்.


இவங்க கோரிக்கையை, நாம் தமிழர் கட்சி சீமான் தான் ஏத்துக்குவார்... அதனால, அவரது கட்சிக்கே ஆதரவு குடுத்துடுங்க!


Advertisement