இன்னும் நிறைய வெற்றிகளை ஈட்ட வேண்டும்!

சமீபத்தில், மாலத்தீவில் நடந்த ஏழாவது உலகப் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி யில், தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் , சென்னை காசிமேடு, செரியன் நகரைச் சேர்ந்த கீர்த்தனா: என் பெற்றோர் கூலி வேலை செய்துட்டு இருந்தாங்க. நான், அண்ணன், தம்பி என மூவர், அவர்களின் வாரிசுகள். என், 5 வயது முதல் கேரம் விளையாட ஆரம்பித்தேன்.

நான், 10ம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா இறந்து விட்டார். அம்மாவின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்தது.

வீட்டில் வறுமை தாண்டவமாடியது. நான் படிப்பையும், கேரம் கனவையும் விட்டு விட்டு ஸ்டீல் பட்டறைக்கு வேலைக்கு சென்றேன். வாரம், 1, 000 ரூபாய் சம்பளம் . பள்ளிக்கு செல்வோரை வேடிக்கை பார்த்தபடியே வேலைக்கு செல்வேன்.

என் எதிர்காலமே முடிந்து விட்டது என நினைத்து அழுதிருக்கிறேன். நானும், அண்ணனும் சேர்ந்து தம்பியை படிக்க வைத்தோம். இப்போது அவன் பட்டதாரி.

பட்டறை, வீடு என இருந்த என்னை சந்திக்க, கேரம் பயிற்சி யாளர் நித்யா ராஜன் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்து, 'நீ கேரம் விளையாடு. உன் திறமையை பட்டறையில் வீணாக் காதே'ன்னு சொன்னார் . நான் தயங்கினேன்.

'செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். அதனால், திரும்பவும் கேரம் விளையாட ஆரம்பித்தேன்.

கடந்த 2023ல், மும்பையில் நடந்த இளைஞர்களுக்கான போட்டியில், மூன்றாம் பரிசு வாங்கினேன்.

அதனால், இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து , மாதம், 18,000 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு உதவித்தொகை கொடுத்தனர். பட்டறை வேலையை விட்டுவிட்டு, ஒரு தனியார் பள்ளியில், கேரம் பயிற்சியாளராக, 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்தேன். கடந்தாண்டு, தேசிய அளவிலான போட்டியில் தங்கம் ஜெயித்தேன்.

மாலத்தீவில் நடந்த ஏழாவது உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வானதும், மகிழ்ச்சியை விட பொருளாதாரம் சார்ந்த யோசனைகள் தான் அதிகமாக இருந்தன. செலவுக்கு என்ன செய்வது என்ற சிந்தனையில், இரவு முழுக்க துாங்காமல் இருந்தேன்.

அடுத்த நாள், தமிழக விளையாட்டு துறை சார்பில், 1.50 லட்சம் ரூபாய் கொடுத்தனர். பணத்தை கையில் வாங்கிய போதே, போட்டியில் ஜெயித்த மாதிரியான சந்தோஷம். கவலையை மறந்து விளையாடினேன்.

உலகக் கோப்பை போட்டியில், மகளிர் தனி நபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியிலும் முதல் பரிசாக, தங்க பதக்கங்களை பெற்றேன்.

சாப்பாடு இல்லாமல் , வாய்ப்புகளுக்கு வழி தெரியாமல் இருந்த எனக்கு, என் திறமை கொடுத்த அங்கீகாரம் இது. இன்னும் நிறைய வெற்றிகளை வசப்படுத்த வேண்டும்.

Advertisement