பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,

11

சென்னை: தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல் திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல் பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 2021ல் பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2022, 2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2024ல் பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது.

தமிழகத்தின் அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது வருந்தத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் நான்காண்டுகளாக நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement