பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்

4


மும்பை: பணி நேரம் முடிந்த காரணத்தினால், விமானத்தை இயக்க விமானி மறுத்துவிட்டார். இதனையடுத்து ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.


நேற்று காலை 4:05 மணிக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கிளம்ப வேண்டியிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சில மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை திட்டினர்.


பணி நேரம் முடிந்துவிட்டதால் விமானத்தை இயக்க முடியாது என விமானி கூறிவிட்டதால் தான் விமானம் கிளம்ப தாமதமானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.


இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பை வர வேண்டிய மாற்று விமானம் தாமதம், விமான நிலையத்தில் நெரிசல் மற்றும் ஊழியர் பணி நேரம் முடிந்தது என பல்வேறு காரணங்களினால், மும்பையில் இருந்து தாய்லாந்து செல்ல வேண்டிய விமானம் தாமதமாகிவிட்டது. அப்போது இரண்டு பயணிகள் அநாகரீகமாக நடந்து கொண்டனர். வழக்கமான நடைமுறைகளின்படி அவர்கள் இருவரும் கீழே இறக்கி விடப்பட்டு, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


விமானத்தில் காத்திருந்த பயணிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு தாய்லாந்து செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக 1 மணிக்கு சென்றடைந்தது.

Advertisement