ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி

1


புதுடில்லி:'' 2 மற்றும் 3 ம் தர நகரங்கள், கிராமப்புறங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நோக்கம்



மத்தியில் ஆளும் பாஜ கூட்டணி அரசின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். நம் நாட்டில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2 லட்சம்



கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தற்போது 10 ஆண்டுகளை எட்டி விட்டது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இந்தியாவின் பொருளாதார, புதுமைக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 2,00,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.

கலந்துரையாடல்



இந்த நிலையில், இதனை சிறப்பிக்கும் விதமாக, டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் தொழில்முனைவோர் பயணத்தின் அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.

புரட்சி



இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: பிரச்னைகளை தீர்ப்பதில் இந்திய இளைஞர்கள், தொழில் முனைவோர் கவனம் செலுத்துகின்றனர். ஸ்டார்ட் அப் இந்தியா, தற்போது ஒரு புரட்சியாக உருவெடுத்துள்ளது.


45 சதவீத அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்கிறார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில், உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்டார்ட்அப்களில் இந்த வளர்ச்சி இந்தியாவின் ஆற்றலை மேம்படுத்துகிறது. இன்று நாடு தனது எதிர்காலத்தை ஸ்டார்ட் அப் புரட்சியில் காண்கிறது.

மத்திய அரசு நிதி



2, 3 ம் தர நகரங்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் ஸ்டார்ட் அப்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இன்றைய ஆராய்ச்சி, நாளைய அறிவுசார் சொத்துரிமையாக மாறுகிறது. இதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement