திமுக எனும் ஊழல் கூடாரத்தை வீழ்த்தும் திறமை தே.ஜ., கூட்டணிக்கு உண்டு; நயினார் நாகேந்திரன்

6


சென்னை: திமுக எனும் ஊழல் கூடாரத்தை வீழ்த்தும் திறமையும் திராணியும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமே உண்டு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: திமுக அரசிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு துவங்கப்பட்ட “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” யாத்திரையில், கடந்த மூன்று மாதங்களாக சரியான உணவை மறந்து, உறக்கம் தொலைத்து என்னுடன் ஓடிக் களைத்தவர்களுக்கு, எள்ளென்றால் எண்ணெய்யாக நின்று இப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர்களுக்கு நன்றி. நேற்றைய நிகழ்ச்சியில் நமது மத்திய உள்துறை அமைச்சர் தன்னம்பிக்கை தெறிக்கும் உரையைக் கேட்ட பிறகு எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்.

பல்லாங்குழி




தனது குடும்பத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தின் குடும்பங்களைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் திமுக எனும் ஊழல் கூடாரத்தை வீழ்த்தும் திறமையும் திராணியும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமே உண்டு. பணத்தை மட்டுமே துணையாகக் கொண்டு தேர்தலைச் சந்திக்கும் திமுக வினை நமது படை தூக்கிப் போட்டு பல்லாங்குழி ஆடப் போகிறது. அதைத் தமிழக மக்கள் கைதட்டி ரசிக்கப் போகிறார்கள். அதற்குக் கடந்த மூன்று மாதங்களாக நடந்த நமது யாத்திரையின் மூலம் தமிழகம் முழுக்க வலுவான அடித்தளமிட்டு இருக்கிறோம்.

நெருப்பாக...!




இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு அதன்மீது பலமான வெற்றிக் கோட்டையைக் கட்டியெழுப்பப் போகிறோம். அக்கோட்டையின் நிழலில் ஊழலில் ஊறிக் கொழுத்த திமுக அரசு மொத்தமாகக் கரைந்து காணாமல் போகப் போகிறது. எனவே, திமுகவின் அக்கிரமங்களைக் கண்டு நீர் பூத்த நெருப்பாக நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் சினத்தைத் தட்டியெழுப்புவோம்.

துடைத்தெறிவோம்




திமுகவின் காட்டாட்சிக்கு எதிராக அணைகட்டித் தடுக்க முடியாத காட்டாற்று வெள்ளமாக இனி களமாடுவோம், நம்மை தடுத்து அடக்க நினைப்பவர்களை அறத்தின் துணைகொண்டு துடைத்தெறிவோம், திமுகவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் பண்பாட்டைக் காக்க தன்மானத் தமிழகத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement