தேசத்துரோக வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்; ஜனவரி 21ல் குற்றச்சாட்டு பதிவு
டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான தேசத் துரோக வழக்கில், வருகிற 21ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக, 2024ல் மாணவர் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவர் போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. மேலும், 3 ஊழல் வழக்குகளில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றொரு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024 டிசம்பரில், 'ஜாய் பங்களா பிரிகேட்' என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்பட்ட ஆன்லைன் கூட்டத்தில் ஷேக் ஹசீனா பங்கேற்றார். இதில், முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசை கவிழ்க்கவும், உள்நாட்டு போரை துாண்டி விட்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இக்குற்றத்திற்காக ஷேக் ஹசீனா உட்பட மொத்தம் 286 பேர் மீது, வங்கதேச குற்ற புலனாய்வு துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம், வரும் ஜனவரி 21ம் தேதி முறையாக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது