தியேட்டர் கழிப்பறையில் கேமரா வைத்தவருக்கு பெண்கள் தர்ம அடி

மடிவாளா: திரையரங்கின் மகளிர் கழிப்பறையில், ரகசிய கேமரா வைத்த வாலிபரை, பெண்களே அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரின் மடிவாளாவில், சந்தியா திரையரங்கு உள்ளது. இங்கு தெலுங்கு படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்ப்பதற்காக பெண்கள் வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், சில இளம்பெண்கள் கழிப்பறைக்கு சென்ற போது, ரகசியமாக கேமரா வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக திரையரங்கில் இருந்த மற்ற பெண்களிடம் கூறினார். திரையரங்கு ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களின் உதவியோடு, திரையரங்கு கண்கணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அப்பகுதி முழுதும் தேடி, ரகசிய கேமரா வைத்த வாலிபரை கண்டுபிடித்தனர்.

பின், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த வாலிபரை அடித்து, உதைத்தனர். அதற்குள் இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த மடிவாளா போலீசாரிடம், அந்த வாலிபரை ஒப்படைத்தனர். அவர் யார், ரகசிய கேமரா வைத்தது ஏன்; இதற்கு முன் வேறு எங்காவது ரகசிய கேமரா வைத்துள்ளாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அவருடன் தொடர்புள்ள கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement