வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு * உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...

துபாய்: ஐ.சி.சி., இரு நபர் குழுவினர் இன்று வங்கதேம் செல்கின்றனர். 'டி-20' உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர முடியாது என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுக்கிறது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது.
பி.சி.பி., முடிவை, வங்கதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த சர்ச்சையால், வங்கதேச வீரர்கள், உள்ளூர் பிரிமியர் போட்டிகளை புறக்கணித்து 'ஷாக்' கொடுத்தனர். தவிர, பி.சி.பி., நிதிக்குழு தலைவர் நஜ்முல் இஸ்லாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கொலை மிரட்டல்
இப்பிரச்னையில், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் முகமது மிதுனுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. இவர் கூறுகையில்,'' உலக கோப்பை தொடர் என்பதால், வங்கதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். வீரர்கள் நலனுக்கு ஏற்ப, பி.சி.பி., முடிவெடுக்கும் என நம்புகிறேன். மற்றபடி தேசத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை. கிரிக்கெட், வீரர்கள் நலனுக்காக மட்டுமே பேசினேன்,'' என்றார்.
குழப்பம் தீருமா
இதனிடையே, 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து, பி.சி.பி.,யிடம் இன்று, ஐ.சி.சி., பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக இருநபர் குழு, வங்கதேசம் செல்கிறது.
பி.சி.பி., தரப்பில் வெளியான செய்தியில்,' ஐ.சி.சி., குழு வருவது உண்மை தான். அனைத்து வித சூழல் குறித்தும் விவாதிக்கப்படும். வங்கதேச அரசின் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement