மீண்டும் வெல்லுமா இந்தியா * வங்கதேசத்துடன் பலப்பரீட்சை

புலவாயோ: யூத் உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி முதல் போட்டியில் அமெரிக்காவை வென்றது. இன்று இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஐந்து முறை சாம்பியன் ஆன இந்திய அணி, கடந்த ஒரு ஆண்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க மண்ணில் தொடரை வென்றுள்ளது. தவிர கடைசி 17 போட்டியில் 14ல் வென்றது.
இம்முறை கேப்டன் ஆயுஷ் மாத்ரே, 14 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் தரலாம். துணைக் கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, ஆல் ரவுண்டர் ஆரோன், வேதாந்த். அபிக்யான் என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பந்து வீச்சில் அமெரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் சாய்த்த, வேகப்பந்து வீச்சாளர் ஹெனில் படேல், தீபேஷ், அம்ப்ரிஸ் உள்ளனர்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில் கேப்டன் அஜிஜுல் ஹகிம், துணைக் கேப்டன் ஜாவத் அப்ரார் கடந்த இரு ஆண்டில், யூத் ஒருநாள் அரங்கில் 1000 ரன்னுக்கும் மேல் எடுத்தது பலம். தவிர வேகத்திற்கு சாதகமான ஜிம்பாப்வே ஆடுகளத்தில், சித்திக், இக்பால் ஹொசைன் அனுபவம் கைகொடுக்கலாம்.

Advertisement