சென்னையில் உலக செஸ் * ஆனந்த் ஆசை

ஜெய்ப்பூர்: ''உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்-பிரக்ஞானந்தா மோதும் நிலை ஏற்பட்டால், இத்தொடர் சென்னையில் நடக்கலாம்,'' என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
சைப்ரசில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடர், வரும் மார்ச் 28-ஏப். 16ல் நடக்க உள்ளது. இந்தியாவின் பிரக்ஞானந்தா 20, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, பேபியானோ உட்பட 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் வெல்லும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை 19, எதிர்த்து விளையாடுவார்.
இதுகுறித்து, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் ஆனந்த் 56, கூறுகையில்,''கேண்டிடேட்ஸ் தொடரில் யார் வென்றாலும், அவர்கள் அதிக திறமை கொண்டவராகத் தான் இருப்பர். ஒருவேளை பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், குகேஷை எதிர்த்து விளையாட வேண்டும்.
இப்போட்டி சாதாரணமாக இருக்காது. உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஏனெனில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். குகேஷ், பிரக்ஞானந்தா என இருவரும் ஒருவர் தான். இவர்களை சுற்றியுள்ள அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவர். இப்போட்டி சென்னையில் கூட நடக்கலாம்,''என்றார்.
மூன்றாவது முறை
இந்தியாவில் இதற்கு முன் இரு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கடந்த 2000ல் டில்லியில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஆனந்த், சாம்பியன் ஆனார். 2013ல் சென்னையில் நடந்த போட்டியில் ஆனந்த், நார்வேயின் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். இம்முறை குகேஷ்-பிரக்ஞானந்தா மோதும் நிலை ஏற்பட்டால், மூன்றாவது முறையாக இந்தியாவில் உலக செஸ் நடக்கலாம்.

Advertisement