முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்

21


புனே: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 06) காலமானார். அவருக்கு வயது 81.


மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்சுரேஷ் கல்மாடி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று (ஜனவரி 06) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. காலமான சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு திருமணமான மகள்கள் மற்றும் மருமகன், பேரக்குழந்தைகள் உள்ளனர்.



1944ம் ஆண்டு மே 1ம் தேதி புனேயில் சுரேஷ் கல்மாடி பிறந்தார். இவர் ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றியவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். புனேயின் முக்கிய அரசியல் பிரமுகரான சுரேஷ் கல்மாடி, புனே லோக்சபா தொகுதி எம்பியாக பதவி வகித்து இருக்கிறார்.


தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்துடனும் தொடர்புடையவராக இருந்தார். விளையாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2011ல் கைது செய்யப்பட்டவர். சர்ச்சைகள் இருந்த போதிலும் விளையாட்டு துறையில் சுரேஷ் கல்மாடி தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினார்.



@block_P@

இவர் ஒரு விமானி!

அரசியலில் நுழைவதற்கு முன்பு, சுரேஷ் கல்மாடி 1964ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றினார். 1974ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் பொது வாழ்க்கையில் நுழைந்து காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியின் போது ரயில்வே துறை இணை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.block_P

Advertisement