டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
புதுடில்லி: “டில்லி சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில், சீக்கிய மதகுரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங், வரும் 19ம் தேதிக்குள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறினார்.
டில்லி சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர், 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. இரண்டாம் நாளான 6ம் தேதி நடந்த கூட்டத்தில்,
சீக்கிய மதகுரு தேவ் பஹதுார் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் டில்லி அரசு நடத்திய நிகழ்ச்சி குறித்து விவாதம் நடந்தது.
அப்போது பேசிய, ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங், குரு தேவ் பஹதூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒத்திவைப்பு ஆதிஷியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், மன்னிப்பு கேட்கக்கோரி கடும் அமளி செய்தனர். இதையடுத்து அன்று நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் ஆதிஷி சிங் சட்டசபைக்கு வரவில்லை. ஆனால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் அமளியால் சபை அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. கடந்த, 9ம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.
இந்நிலையில், சபாநாயகர் விஜேந்தர் குப்தா, நிருபர்களிடம் நேற்று கூறியதவது:
சட்டசபையில், 6-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி பேசியது குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கை, 7ம் தேதி சபையில் வாசிக்கப்பட்டது. மேலும், தன் பேச்சுக்கு விளக்கம் அளிக்கவும் ஆதிஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆறாம் தேதியும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதேநேரத்தில், டில்லி சட்டசபையில் நடந்த இந்த விவகாரம் குறித்து டில்லி அமைச்சர் மற்றும் சிலர் மீது பஞ்சாப் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், டில்லி சட்டசபையின் நடவடிக்கை குறித்த வீடியோ திரிக்கப்பட்டது எனவும் பஞ்சாப் போலீஸ் கூறியுள்ளது. இது, டில்லி சட்டசபையின் மாண்பை சீர்குலைக்கும் செயல்.
பஞ்சாப் தடயவியல் அறிவியல் ஆய்வகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்களின் பங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி, 6ம் தேதியே தன் விளக்கத்தை அளித்திருக்க முடியும். ஆனால், பதிலளிக்காமல் சபையில் இருந்து வெளியேறி விட்டார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இந்த விவகாரத்தை சபையில் எழுப்பிய பின், கடும் அமளி ஏற்பட்டது. இதனால், சபையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வாய்ப்பு இந்த விவகாரம், 7-ம் தேதி மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. சபைக்கு வந்து விளக்கம் அளிக்கவோ அல்லது தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ ஆதிஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு, மரியாதை மற்றும் அர்ப்பணிப்பு இல்லாதபோதுதான், இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை பேச வைக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் தன் கருத்துக்களைத் தெரிவிக்காமல் சபையில் எந்த விவாதமும் இதுவரை நிறைவடைந்தது இல்லை. சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகள் அரசியலமைப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.
எதிர்க்கட்சித் தலைவரான ஆதிஷி சிங், விவாதத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது, சபை நடவடிக்கைகளின் போது உரிய மரியாதை அளிக்காமல் சபையை விட்டு வெளியேறுவது, மீண்டும் மீண்டும் அழைப்பு அனுப்பிய போதும் சபைக்கு வராமல் தவிர்ப்பது கவலைக்குரியது.
சீக்கிய மதகுரு குறித்த தன் பேச்சுக்கு, 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க ஆதிஷி சிங்குக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்