அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பு: வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்

2


கராகஸ்: வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், 'அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக' தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 63, மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், 69, ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் பதவியேற்ற பிறகு கூறியதாவது: நான் துக்கத்துடன் இருக்கிறேன். எங்கள் நாட்டின் மீதான சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வெனிசுலா மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நான் வருத்தம் அடை கிறேன். இரண்டு ஹீரோக்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார்.



இடைக்கால அதிபர் டெல்சி யார்?



* டெல்சி ரோட்ரிக்ஸ், 56, வெனிசுலாவின் துணை அதிபராக இருந்தவர்.



* இவர் 1970களில் புரட்சிகர லிகா சோஷலிச கட்சியை நிறுவிய ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்சின் மகள்.
* வெனிசுலா மக்களிடையே இவருக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதிபர் மதுரோவின் தீவிர விசுவாசி.

துப்பாக்கிச்சூடு



அமெரிக்காவால் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெனிசுலாவின் கராகஸில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. வெனிசுலாவில் அதிபர் மாளிகை மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



கராகஸில் பலத்த துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ட்ரோன் அல்லது விமான சத்தங்களும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement