வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!

13

-நமது நிருபர்-


''கூட்டணி ஆட்சியில் பங்கேற்றபோது, காங்கிரஸ் எப்போதும் வளம்மிக்க துறைகளை தேடிப் போனதில்லை,'' என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ., எம்பி.,க்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கும் கருத்துக்கள், திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.


இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:


கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுப்பணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற வளமிக்க துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.


மஹாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், காதி மற்றும் கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். முதலில் தயாநிதியும், அவரை தொடர்ந்து ஆ.ராஜாவும், தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தனர்.

ரகுபதி, ராதிகாசெல்வி ஆகியோர் உள்துறை இணை அமைச்சர்களாக இருந்தனர். பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். 2009 அமைச்சரவையில், தயாநிதி ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார். ஆ.ராஜா, தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அழகிரி, உரத்துறை அமைச்சராக இருந்தார்.

முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளில், திமுகவின் முரசொலி மாறன், தொழில் துறை அமைச்சராகவும், வெங்கட்ராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.

கூட்டணியை பயன்படுத்தி, பசையான துறைகளை திமுக பெற்றதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Advertisement