மெக்காலே மனநிலையை மாற்றும் கருவிதான் இந்திய மொழி: மத்திய அமைச்சர்

1

புதுடில்லி: '' மெக்காலே மன நிலையை மாற்றுவதற்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இந்திய மொழிகள் உள்ளன,'' என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவின் பாரம்பரிய மொழிகளின் 55 இலக்கியப் படைப்புகள் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. சிஐஐஎல்( இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம்) மற்றும் சிஐசிடி(செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம்)ஆகியவற்றின் கீழ் பாரம்பரிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சமஸ்கிருதமும் ஒரு பாரம்பரிய மொழி. கடந்த ஆண்டு, மராத்தி, பெங்காலி அசோமியா, பாலி மற்றும் பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகள் இந்திய பாரம்பரிய மொழிகளாக வகைப்படுத்தப்பட்டன.


இந்தியாவின் மொழிகள் சமூகத்தை இணைக்கின்றன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய மொழிகளின் அடிப்படையில் இந்தியாவில் கல்வி வழங்கப்பட்டால், இந்தியா வளர்ச்சி அடையும் என்பது தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும். 2047 ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்திய மொழிகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்காக நாங்கள் ஒரு பாரதிய பாஷா சமீதி என்ற குழுவை அமைத்துள்ளோம்.


பாலர் பள்ளி முதல் உயர்நிலை ஆராய்ச்சி வரையில் கல்வி,இந்திய மொழிகளில் இருக்க வேண்டும். 5ம் வகுப்பு வரை கல்வியை தாய்மொழியில் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களுக்கு இந்திய மொழி சார்ந்த சட்ட மொழி வரைவு செய்யப்பட்டு வருகிறது.மெக்காலே மன நிலையை மாற்ற வேண்டும் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.மெக்காலே மனநிலையை மாற்றுவதற்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இந்திய மொழிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement