கட்டுப்பாடுகளால் திணறும் சுற்றுலா துறை!

ஒட்டுமொத்த கண்டங்களுக்கு சமமான நாகரிக செல்வத்தை கொண்டது நம் நாடு. வரலாறு, பண்பாடு, இயற்கை நிலப்பரப்புகள், உணவு வகைகள், ஆன்மிக பாரம்பரியம் ஆகியவற்றின் அபூர்வ கலவையை கொண்ட தேசம். இப்படி தன்னிகரற்று திகழ்ந்தாலும், அதன் சுற்றுலா வளர்ச்சி, நீண்ட காலமாகவே பயன்படுத்தப்படாத வாய்ப்பாகவே இருக்கிறது.


பொருளாதார வளர்ச்சிக்கான சக்திமிக்க இயந்திரமாக இருக்க வேண்டிய சுற்றுலா துறை, தொடர்ந்து எதிர்பார்ப்பை விட குறைந்த வேகத்திலேயே வளர்கிறது.

பல்வேறு சட்டங்கள்



காரணம் மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. இந்தியாவில் சுற்றுலா துறை, அதிக அபாயமுள்ள தொழில் துறை போல் பல்வேறு ஒழுங்குமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.


ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேக்கள், ரெஸ்டாரன்ட்கள், கபேக்கள், சாகச சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட, சுற்றுலாவின் பல்வேறு துணை துறைகள், பல்வேறு சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், ஒட்டுமொத்த சுற்றுலா துறை விரிவடைய முடியாமல் திணறுகிறது.


மத்திய, மாநில அரசுகள், நகராட்சி அமைப்புக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமல், துண்டு துண்டாக உருவான இந்த சட்டங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. எனவே, டி-ரெகுலேஷன் எனப்படும் ஒழுங்குமுறை தளர்வு தான், நம் நாட்டின் சுற்றுலா எழுச்சியை திறக்கும் ஒரே வழி.


கடந்த 2024ம் ஆண்டில் நம் நாடு, சுமார் 99.50 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமே வரவேற்றது. அதே ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மட்டும் 3.70 கோடி சுற்றுலா பயணிகளை பெற்றதில் இருந்தே இந்திய சுற்றுலாவின் திணறலை அறியலாம்.


நம் நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவும் வேகமாக வளர்ந்து வருகிறது. மகிழ்வான அனுபவங்களை பெற, கணிசமாக செலவிட தயாரான நடுத்தர வர்க்கமும், டிஜிட்டல் தளங்களின் வழியே கிடைக்கும் தகவல்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.

ஹோட்டல் வளர்ச்சி



எதிர்காலத்தில் ஹோட்டல் துறை தேவை மேலும் அதிகரிக்க உள்ளது. 2024 முதல் 2028 வரை சொகுசு அறைகளின் தேவை ஆண்டுக்கு 10.60 சதவீதம் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவற்றின் சப்ளைக்கான வளர்ச்சி 5.90 சதவீதமாக மட்டுமே இருக்கும். சந்தை தோல்வியால் இந்த இடைவெளி உருவாகவில்லை ; ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் தோல்வியால் உருவானது.


மூன்று அடுக்குகள்



நம் நாட்டின் சுற்றுலா நிர்வாகம் மூன்று அடுக்குகளாக செயல்படுகிறது. மத்திய சட்டங்கள், மாநில சட்டங்கள், நகராட்சி விதிகள் என ஒவ்வொரு அடுக்கும் தனித்தனியாக செயல்படுகின்றன.


மத்திய அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், தேசிய கட்டட குறியீடு, மோட்டார் வாகன சட்டம் போன்றவை தெளிவான கட்டமைப்பை வழங்குகின்றன. இவை மட்டுமே இருந்தால், நமது சுற்றுலா துறை உலக தரத்தில் செயல்பட முடியும்.


ஆனால், மாநிலங்களும் நகராட்சிகளும் இதே விஷயங்களை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தும் விதமாக தனித்தனி அனுமதிகள், ஆய்வுகள், உரிமங்கள் ஆகியவற்றை கையாள்கின்றன. இதனால், ஒரே விஷயத்துக்கு பல்வேறு அனுமதிகள் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

தனித்தனி அனுமதி



பல மாநிலங்களில் உணவகங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமத்துடன் கூடுதலாக நகராட்சி சுகாதார உரிமம், காவல்துறை உரிமம் ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு பாதுகாப்பில் தேசிய கட்டட குறியீடு இருந்தும், மாநில தீயணைப்பு துறைகள் தனித்தனி அனுமதிகளை கோருகின்றன.


ஹோட்டல்கள், குறைந்த அபாயம் கொண்ட சமையல் எரிவாயு அல்லது மின்சார சமையலறைகளை பயன்படுத்தினாலும், பல மாநிலங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் அவற்றை தொழிற்சாலைகளுக்கான 'ஆரஞ்சு' பிரிவில் சேர்க்கின்றன. இதனால், ஹோட்டல் துறைக்கு தேவையற்ற செலவுகளும் தாமதங்களும் ஏற்படுகின்றன.


ஒருங்கிணைப்பு தேவை



அடிப்படை விதிகளை மத்திய அரசு ஒருங்கிணைக்க வேண்டும். ஒரே கட்டுப்பாட்டில், உணவு பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அளவியல் விதிகள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும். மாநிலங்கள் ஒரே இடத்தில் ஒரே உரிமமாக செயல்படும் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் உரிமம் வழங்கும் முறைக்கு மாற வேண்டும். நகராட்சிகள் டிஜிட்டல் மயமாகி, தாமதங்களையும் சுய அதிகாரத்தையும் குறைத்து கொள்ள வேண்டும்.


ஹோம்ஸ்டே மற்றும் சிறிய உணவகங்கள் விரைவான பலன்களை தரக்கூடியவை. இவற்றுக்கு சுயசான்றிதழ் அடிப்படையில் உடனடி செயல்பாட்டு அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் ஆயிரக்கணக்கான குடும்ப நிறுவனங்கள் உருவாகலாம்.

தவறான விமர்சனம்



ஒழுங்குமுறையை தளர்த்தினால், அது பாதுகாப்பை குறைக்கும் என்ற விமர்சனம் தவறானது. மீண்டும் மீண்டும் அனுமதிகளை பெறுவது பாதுகாப்பை உயர்த்தாது; ஆவண சுமையையும் சலிப்பையும் மட்டுமே அதிகரிக்கும்.


அபாய அடிப்படையிலான ஒழுங்குமுறைகள், நீண்ட காலம் செல்லுபடியாகும் உரிமங்கள், திடீர் ஆய்வுகள் ஆகியவையே உலகின் வெற்றிகரமான சுற்றுலா நாடுகளின் நடைமுறைகளாக உள்ளன.


இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், திட்ட செலவுகள் குறையும், அறை எண்ணிக்கை உயரும், சுற்றுலா செலவு மலிவாகும், வேலைவாய்ப்புகள் பெருகும். இந்தியா ஏற்கனவே விமான நிலையங்கள், விரைவு சாலைகள், ரயில் இணைப்புகள் போன்ற உட்கட்டமைப்புகளை உருவாக்கி விட்டது. இப்போது மாற்றம் தேவைப்படுவது சுற்றுலா சட்டத்தின் கட்டமைப்பில் தான்.


நம் நாட்டில் 1,000 பேருக்கு 0.8 ஹோட்டல் அறைகள் மட்டுமே உள்ளன. அமெரிக்காவில் இது 10ஐ தாண்டியுள்ளது. தாய்லாந்து, துருக்கி நாடுகளில் இது 3 முதல் 4 வரை உள்ளது. இந்த இடைவெளி கலாசார சிக்கல் அல்ல; ஒழுங்குமுறை சிக்கல்தான்.

Advertisement