'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் பண்டிகையையொட்டி, 500 மாணவியர், 'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று அசத்தினர்.

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வித்தியாசமான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இதற்காக, 12 ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், 6, 8 மற்றும் பிளஸ் 1 படிக்கும், 500 மாணவியர் ஒன்றிணைந்து, அரசு பள்ளி மைதானத்தில், பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரிய மண்பானையில் பொங்கல் வைப்பதை எடுத்து கூறும் வகையிலும், பிளாஸ்டிக் ஒழிப்பை எடுத்துரைக்கும் வகையிலும், கையில் 'மஞ்சப்பை'யுடன் மூன்று மணி நேர முயற்சிக்கு பின்னர் மண்பானை வடிவில் நின்று, பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

மண்பானை வடிவின் நடுவே, 'பசுமை பொங்கல்' என்னும் வார்த்தைகள் போல் மாணவியர் அமர்ந்தும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியரின் இந்த வித்தியாசமான பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியை பெற்றோரும், பொதுமக்களும் கண்டு மகிழ்ந்தனர்.

Advertisement