ஸ்டீல் விலையை ரகசியமாக உயர்த்தியதாக சி.சி.ஐ., பகீர்: நெருக்கடியில் நிறுவனங்கள்?

6

புதுடில்லி: டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், செயில் மற்றும் 25 இதர நிறுவனங்கள் ரகசிய கூட்டு சேர்ந்து ஸ்டீல் விலையை உயர்த்தியிருப்பதாக இந்திய வணிக போட்டி ஆணையமான சி.சி.ஐ.,யின் ஆவணத்தில் தெரியவந்துள்ளது.


செய்தி நிறுவனம் ஒன்றின் வாயிலாக வெளியான தகவல் வருமாறு:




ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜன் ஜிண்டால், டாடா ஸ்டீல் நிறுவன சி.இ.ஓ., நரேந்திரன், செயில் நிறுவனத்தின் 4 முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட 56 உயர் அதிகாரிகளுக்கு கணிசமான தொகையை அபராதம் விதிக்க சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


கடந்த 2015 முதல் 2023 வரை, இவர்கள் கூட்டாக பேசி சந்தையில் ஸ்டீல் விலையை சொந்த லாபத்துக்காக உயர்த்தியதாக அக்டோபர் 6ல் ஆணையம் தயாரித்த அறிக்கையில் தகவல் இடம்பெற்று உள்ளது. இது இன்னும் பொது வெளியில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.


குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்படும். இது பல மாதங்கள் பிடிக்கும் நடைமுறை ஆகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, அவர்களின் லாபத்தொகையில் 3 மடங்கு அல்லது ஒட்டுமொத்த விற்பனையில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.
Latest Tamil News

* ஸ்டீல் விலை செயற்கையாக உயர்த்தப்படுவதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

* வழக்கில் 2021ல் ஒன்பது நிறுவனங்கள் மீது 6 மாதங்களில் 55% விலை உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது

* வழக்கு பின்னர் இந்திய வணிக போட்டி ஆணையத்துக்கு மாற்றப்பட்டது

* கடந்த 2022ல் போட்டி ஆணையம், ஸ்டீல் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தியது

Advertisement