பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 15 வயது சிறுவன் கைது

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், பஞ்சாபின் பதான்கோட்டைச் சேர்ந்த, 15 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், அந்நாட்டுக்கு உளவு பார்ப்போரை, நம் பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட்களுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில், பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

கைதான சிறுவன், நம் நாட்டை பற்றிய முக்கிய பாதுகாப்பு தகவல்களை, ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட் களுடன் ஓராண்டாக பகிர்ந்து வந்துள்ளான். சில தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக இந்த தகவல்கள் பரிமாறப்பட்டன. உளவு பார்க்க சிறுவர்களை ஐ.எஸ்.ஐ., மூளைச்சலவை செய்துள்ளது, மிகவும் கவலை அளிக்கிறது. இது, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

பஞ்சாபைச் சேர்ந்த மேலும் சில சிறுவர்களுக்கும், ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட்களுடன் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். இது குறித்து கண்காணிக்கும்படி, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கைதான சிறுவனுடன் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அவர்களையும் கைது செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement