நேபாளத்தில் வன்முறை; இந்திய எல்லை மூடல்

காத்மாண்டு: நேபாளத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்திய எல்லை மூடப்பட்டு உள்ளது.


நம் அண்டை நாடான நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தில் இரு முஸ்லிம் இளைஞர்கள், ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு குழுவினர், சகுவா மரன் பகுதியில் உள்ள மசூதியை சேதப்படுத்தினர்.


இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிர்கஞ்ச் நகரில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறி, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மீது கற்கள் வீசப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.


இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பர்சா மாவட்டம் பிர்கஞ்ச் நகரில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நேபாளத்துடனான எல்லையை, நம் எஸ்.எஸ்.பி., எனப்படும் எல்லை ஆயுதப் படை மூடியுள்ளது.


மைத்ரி பாலம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடும் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேபாள எல்லையை ஒட்டியுள்ள பீஹார் மாநிலம் ரக்சால் எல்லைப் பகுதியிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement