மியூச்சுவல் பண்டுகளில் வெளியேறும் தொகை எவ்வளவு?
மியூச்சுவல் பண்டு துறை, மாதந்தோறும் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யப்படும் தகவலை மட்டுமே வெளியிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதலீடுகள் அதிகரிப்பதாக வெளியிடப்படும் தரவுகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக இருந்தாலும், அவற்றில் எவ்வளவு எஸ்.ஐ.பி.,க்கள் நிறுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு தொகை வெளியேறியுள்ளது போன்ற தகவல்கள் இல்லை. இதனால், இத்துறையின் நிகர சொத்து மதிப்பு குறித்த உண்மையான நிலை என்ன என்பது பற்றிய வெளிப்படைத்தன்மை இல்லாதது முதலீட்டாளர்களின் நீண்டகால நம்பிக்கையை சிதைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வரும் முதலீடு என்பது நடப்பு மாதத்துக்கானது என்றும் ஆனால், திட்டங்களில் இருந்து வெளியேறுவது என்பது கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் சேர்ந்த மொத்த முதலீட்டில் இருந்து எடுக்கப்படுபவை என்பதால், இரண்டையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே, செபி இதில் தலையிட்டு முழுமையான அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.