கோழி, ஆடுகளுக்கு எல்லாம் உயிர் இல்லையா? தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

30

புதுடில்லி: "பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?" என்று தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இதில், நாய் வளர்ப்பவர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒரு தரப்பினராகவும், தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி மனு தாக்கல் செய்தவர்கள் மற்றொரு தரப்பினராகவும் ஆஜராகி வாதமிட்டு வருகின்றனர்.

அனைத்து தெருநாய்களையும் பிடித்து அடைக்கும் நிலை ஏற்பட்டால், குப்பை கழிவுகள் மற்றும் குரங்குகளை விரட்டுவது கேள்விக்குறியாகி விடும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அதேவேளையில், தெருநாயால் பாதிக்கப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் தந்தை தரப்பில், "தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நொய்டா அதிகாரிகள் தவறி விட்டனர். குடியிருப்பாளர்கள் நலச்சங்கத்தினர் தங்கள் பகுதிகளில் தெருநாய்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்றார்.

அப்போது, விலங்குகள் நலஆர்வலர்களுக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வக்கீல் கபில் சிபல், "நாங்கள் தெருநாய்களின் பிரியர்களாகவும், பாதுகாப்பான சுற்றுச்சூழலை விரும்புபவர்களாகவும் இங்கு வந்துள்ளோம்," என்றார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், "பிற விலங்குகளின் உயிர்களின் நிலை என்ன? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?. சாலைகளில் தெருநாய்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். நாய்கள் கடிக்காமல் இருக்கலாம், ஆனால், அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே நாய்கள் இருப்பதால் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement