மின் துாக்கி வசதியின்றி ரயில் பயணியர் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், முன்பதிவு மையம் அமைந்துள்ள பஜார் பகுதியில், மின் துாக்கி வசதியின்றி ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், 25 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் மூன்று இடங்களில், மின் துாக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், ரயில்வே முன்பதிவு மையம் அமைந்துள்ள பஜார் பகுதியில், மின்துாக்கி வசதி இல்லை. ரயில் தண்டவாளங்களை கடந்து நடைமேடைகளை சென்றடைய முடியாதபடி தடுப்பு சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இதனால், ரயில் பயணச்சீட்டை பெறும் பயணியர், உயரமான நடைபால படிகளில் ஏறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

குறிப்பாக வயதானவர்களும், நோயாளிகளும், கர்ப்பிணியரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, ரயில் பயணியரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, ரயில் முன்பதிவு மையம் அமைந்துள்ள பஜார் பகுதியிலும் மின்துாக்கி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement