பெரியகோட்டையில் சேதமடைந்த குடிநீர் தொட்டியால் அச்சத்தில் மக்கள்
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து கீழே இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உலகுடைய அம்மன் கோயில் அருகிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலும் கட்டப்பட்டது.
5 வருடங்களுக்கு முன்பு 2 குடிநீர் தொட்டியும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அதற்கு அருகிலேயே புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு தற்போது அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை இதுவரை இடிக்காததால் அதிலிருந்து சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்ந்து கீழே விழுகின்றன.
மேலும் இதற்கு அருகில் நின்று தினந் தோறும் கிராம மக்கள் அச்சத்துடனேயே குடிநீர் பிடித்து வருகின்றனர். இதேபோன்று அருகில் உள்ள தெக்கூர் கிராமத்திலும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியையும் இடித்து அகற்ற வேண்டுமென ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.