ஹாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை; வங்கதேச குற்றச்சாட்டுக்கு ஷேக் ஹசீனா மறுப்பு
புதுடில்லி: வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஓஸ்மான் ஹாதி கொலைக்கும், இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விளக்கம் அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. இவர் கடந்த டிசம்பர் 18ம் தேதி டாக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அவாமி லீக் கட்சியின் உத்தரவின் பேரில் அரசியல் பழிவாங்கல் காரணமாக கொல்லப்பட்டு இருப்பதாக வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளி பைசல் கரீம் மசூத், இந்தியாவுக்கு தப்பிச் சென்று மேகாலயாவின் துரா நகரில் பதுங்கியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மசூத், தான் துபாயில் இருப்பதாகவும், ஹாதியின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஓஸ்மான் ஹாதி கொலைக்கும், இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் கூறியதாவது; இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசின் கீழ் வங்கதேசத்தில் நிலவிய சட்டம் ஒழுங்கின்மை மற்றும் தேர்தல் வன்முறையின் காரணமாகத்தான் ஓஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டுள்ளார். ஹாதியின் கொலை ஒரு துயரமான சம்பவம். இடைக்கால அரசின் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, ஹாதியின் கொலையை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
ஹாதி கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசுவது அடிப்படை ஆதாரமற்றது. யூனுஸ் அரசின் தோல்விகளை மறைக்க, ஹாதியின் கொலையை வெளிநாட்டு சதித்திட்டம் என்று கட்டமைக்க முயற்சிகள் நடக்கின்றன. யூனுஸின் அரசின் இந்தக் கருத்துக்கள் மக்களுடையது அல்ல. வங்கதேசத்தின் வர்த்தகம் மற்றும் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, நமது பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. முகமது யூனுஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் ஆபத்தானது, என்றார்.
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்