மைனர் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

3

புதுடில்லி: மைனர் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜை தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் சஸ்பெண்ட் செய்தது.

தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளாரான அங்குஷ் பரத்வாஜ் முன்னாள் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மற்றும் 2008 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர். கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நியமிக்கப்பட்ட 37 பேர் கொண்ட தேசிய பயிற்சியாளர் குழுவில் ஒருவராகவும் இருந்தார்.

இந்நிலையில் பரிதாபாத்தின் சூரஜ்குண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், "செயல்திறன் ஆய்வு" செய்வதாகக் கூறி 17 வயதான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைக்கு அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது, அதை மீறி கூறினால், விளையாட்டு வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று அந்த வீராங்கனையை அங்குஷ் பரத்வாஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த மைனர் வீராங்கனை நடந்தது குறித்து தனது தாயிடம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் பரிதாபாத் என்ஐடி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அங்குஷ் பரத்வாஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புகாரை தொடர்ந்து,தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் , ஒழுக்க நெறிமுறைகளின் அடிப்படையில் அங்குஷ் பரத்வாஜை சஸ்பெண்ட் செய்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வரை அனைத்து பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது ஏற்கனவே 2010-ஆம் ஆண்டில் ஊக்கமருந்து பயன்படுத்திய புகாரில் தடை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement