தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கவர்னர் ரவி குற்றச்சாட்டு

21

சென்னை:திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரத்தில், தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்ததில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.


சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் ஜனநாயகமானது - அதன் உணர்வில் நாகரிகமானது, வடிவில் அரசியலமைப்புச் சார்ந்தது. செயல்பாட்டில் வலிமையானதாகவும், நிலையானதாகவும், துடிப்பானதாகவும் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தில் வேரூன்றிய இது, குடியரசை பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து பரிணமிக்கும் நவீன அமைப்புகளால் நிலைநிறுத்தப்படுகிறது.


கடந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ள அசாதாரணமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கு இது வழிகாட்டுகிறது. இதன் தாக்கம், இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பிரதிபலிக்கிறது. அதாவது, 25 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்; இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.


இந்த புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கை, ஒவ்வொரு குடிமகனின் ஆற்றலுடன் சேர்ந்து, நமது குடியரசை தொடர்ந்து நிலைப்படுத்தி பலப்படுத்துகிறது. அரசியலமைப்பு நிறுவனங்களைக் குறைமதிப்புக்கு உள்படுத்தும் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் நடப்பது கவலை அளிக்கிறது. நீதித்துறை, தேர்தல் கமிஷன் மற்றும் பிற அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சி நடக்கிறது.


இதுபோன்ற செயல்கள் தேசத்தின் தன்னம்பிக்கையைத் தாக்கி, குடியரசின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன. நமது வரலாற்றில் இதுவரை நடக்காதது. தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்ததில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவில் மகிழ்ச்சி இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றம் செல்லுங்கள். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


இந்நிகழ்வில், 3,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து, தேசத்தின் பெருமை, ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வை எதிரொலிக்கும் வகையில், வந்தே மாதரம் பாடலை உணர்ச்சிபூர்வமாகப் பாடினர்.

Advertisement