பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.2,500 உயர்வு!: ஏற்க மறுத்து தொடர் போராட்டம்

சென்னை : பகுதி நேர ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, ''அவர்களுக்கு 2,500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும். இனிமேல், பள்ளி விடுமுறை காலமான மே மாதமும் சம்பளமாக, 10,000 ரூபாய் வழங்கப்படும்,'' என்று, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார். இதை ஏற்க மறுத்த பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை வெளியாகும் வரை, போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



தமிழக பள்ளி கல்வித் துறையில், பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கடந்த 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஏழாம் நாளான நேற்றும், 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பேச்சுவார்த்தை






அதை தொடர்ந்து, சங்க நிர்வாகிகளை, அமைச்சர் மகேஷ் தன் வீட்டுக்கு அழைத்து பேச்சு நடத்தினார். அப்போது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உடனிருந்தனர்.
இதன் பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:

பகுதி நேர ஆசிரியர்களை அழைத்து பேசினோம். அவர்கள் மாதம், 5,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர். அதன்பின், சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 12,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேட்டனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் உள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, 3,548 கோடி ரூபாய் வராமல் உள்ளது.

மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என கூறி, மாநில அரசு நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது கூடுதல் செலவினமாகும். எனினும், நம்மை நம்பியுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால், முழு நேர பணியை உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனர். முழு நேர பணியில் ஈடுபடுத்தினால், சட்ட சிக்கல் வருமா என ஆலோசிக்கப்படுகிறது.

உத்தரவு



இடைக்காலமாக போராட்டத்தை முடிக்க, கூடுதலாக 2,500 ரூபாய் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாத சம்பளமாக 15,000 ரூபாய் வழங்கப்படும்.
மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் மே மாத சம்பளமும் வேண்டும் என கேட்கின்றனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அந்த மாதத்தில் விடுமுறை என்றாலும் கூட, மே மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்க, பகுதி நேர ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்து, அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என, கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முரளி அறிவித்தார்.

அதை தொடர்ந்து, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு வெளியே வெவ்வேறு பகுதிகளில் இறக்கி விட்டனர்.

இது குறித்து, பகுதி நேர ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

நாங்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை. தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடர்வோம். போராட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்த, பகுதி நேர ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு, தி.மு.க., அரசு பதில் கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@ தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் மரணம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை, தினமும் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர். நேற்று முன்தினம் கைதான ஆசிரியர்களை, சென்னை வானகரம் பகுதியில், ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, பெரம்பலுார் மாவட்டம், என்.புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்த கண்ணன், 44, திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை அவர் இறந்தார். இவருக்கு மனைவி, பிளஸ் 2 படிக்கும் ஒரு மகன் உள்ளனர்.block_B

Advertisement