சாதிக்குமா இளம் இந்தியா * 19 வயது உலக கோப்பை தொடர் துவக்கம்
புலவாயோ: ஐ.சி.சி., 19 வயது உலக கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. இதில் அசத்தி, இந்தியா ஆறாவது கோப்பை வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 16வது சீசன், இன்று துவங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி 'ஏ' பிரிவில் வங்கதேசம், அமெரிக்கா, நியூசிலாந்துடன் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை சந்திக்கிறது. அடுத்து வங்கதேசம் (ஜன. 17), நியூசிலாந்துடன் (ஜன. 24) மோதும்.
யார் ஆதிக்கம்
இந்திய அணி 19 வயது உலக கோப்பை தொடரில் இதுவரை 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை சாம்பியன் ஆனது. தவிர, கடைசி ஐந்து தொடரிலும் பைனலுக்கு முன்னேறியது இந்தியா.
இம்முறை ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்குகிறது. துணைக் கேப்டனாக விஹான் மல்ஹோத்ரா உள்ளார். தவிர ஆரோன் ஜார்ஜ், 14வயது வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.
பவுலிங்கை பொறுத்தவரையில் கிஷன் சிங், ஹெனில் படேல், தீபேஷ் தேவேந்திரனின் 'வேகம்' அணிக்கு கைகொடுக்கலாம். அம்ப்ரிஷ் 'ஆல் ரவுண்டர்' திறமை கூடுதல் பலம். கடைசியாக பங்கேற்ற 16 போட்டியில் இந்தியா 13ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
அமெரிக்கா எப்படி
அமெரிக்க அணி உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் களமிறங்குகிறது. ஷிவ் ஷானி, நிதிஷ், அத்வைத், அர்ஜுன், அம்ரிந்தர் என பல இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்ற போதும், இந்தியா சவாலை சந்திப்பது சிரமம் தான்.
தவிர 4 கோப்பை வென்ற ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் கோப்பை போட்டியில் உள்ளன.
பைனல் செல்வது எப்படி
பங்கேற்கும் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடம் பெறும் 12 அணிகள் 'சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறும்.
* இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். பைனல், பிப். 6ல் ஹராரேயில் நடக்கும்.
வைபவ் எதிர்பார்ப்பு
இந்தியாவின் கோலி, ரோகித் சர்மா, தற்போதைய ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் என பலர், 19 வயது உலக கோப்பை தொடரில் சாதித்து, சர்வதேச அரங்கில் ஜொலிக்கின்றனர்.
இம்முறை ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதில், 14 வயதான வைபவ், கடந்த 2025, பிரிமியர் தொடரில் 38 பந்தில் 101 ரன் விளாசினார். இதுவரை 9 சதம் விளாசியுள்ளார். இது தொடர்ந்தால், இந்தியா மீண்டும் கோப்பை வெல்லலாம்.