வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு; முக்கிய குற்றவாளி சிக்கினான்

12

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசின் அராபத் கைது செய்யப்பட்டான்.


வங்கதேசத்தில் ஹிந்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவம் தலை தூக்கி உள்ளது. மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது.


இதில் அவர் உயிரிழந்தார். அப்போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி "தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் இன்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மதரஸாவில் பணியாற்றிய போதகர் யாசின் அராபத் கைது செய்யப்பட்டான். தெற்கு ஹோபிர்பாரியில் வசிக்கும் காசி மியாவின் மகன் 25 வயதான யாசின், தொழிற்சாலை வாயிலில் ஹிந்து இளைரை தாக்கிய கும்பலை வழிநடத்தி இருக்கிறான். அவரது உடலை மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஸ்கொயர் மாஸ்டர்பாரி பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைப்பதில் யாசின்
முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரிய வந்தது.


யாசின் அராபத் ஷேகாபரி மசூதியில் இமாமாகப் பணியாற்றி வந்தான். கடந்த 18 மாதங்களாக ஒரு மதரஸாவில் போதகராக பணியாற்றி இருக்கிறான். டிசம்பர் 18ம் தேதி தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 12 நாட்கள் தலைமறைவாகி, டாக்காவில் உள்ள பல்வேறு மதரஸாக்களுக்கு சென்று, போலி அடையாளத்தின் கீழ் சுபா மதரஸாவில் கற்பித்தல் பணியைப் பெற்றது அம்பலமாகி உள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது கைதிகள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என வங்கதேச போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Advertisement