தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 22 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பாங்காக்கிற்கு வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியு மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் திட்டப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், ராட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது திடீரென சரிந்து விழுந்தது. இதில், ரயில் பெட்டியின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும், ரயில் தடம்புரண்டதில், தீப்பிடித்தும் எரிந்தது.

இதில், 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அரசு தரப்பில், "கட்டுமானக் கிரேன் இன்று காலை (ஜனவரி 14) காலை 9.05 மணிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரிந்து விழுந்தது. ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. பலர் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளனர். மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement