போராடி முன்னேறியுள்ளோம்; வீழ்த்த அனுமதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

27

சென்னை: '' நாம் போராடி, போராடி முன்னேறியுள்ளோம். நம்மை வீழ்த்த அனுமதிக்கக்கூடாது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வரவேற்பு



சென்னையில் 49வது புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புத்தக கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும். அதிக மக்கள் வர வேண்டும். அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவ்வகையில் புத்தக கண்காட்சி நடப்பது வரவேற்கத்தக்கது. அரங்கை பார்வையிட கட்டணம் வசூலிக்காதது வரவேற்கத்தக்கது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
@1brதமிழ் சமூகம் அறிவில் சிறந்த சமூகமாக உலகத்தால் மதிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவு புரட்சி ஏற்படுத்த தோன்றியது தான் திராவிட இயக்கம். அறிவு புரட்சிக்கு பயன்படுத்தும் முக்கிய கருவிதான் புத்தகங்கள். அறிவுக்கான தீ பரவட்டும் என்ற பாதையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

4 லட்சம்



தனிப்பட்ட முறையில் 2017 முதல், என்னை சந்திப்பவர்கள், பொன்னாடைகள், பூங்கொத்துகளுக்கு பதில் புத்தகம் கொடுக்க வேண்டும் எனகூறினேன். அப்படி பெறப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்கி வருகிறேன். அந்த வகையில் 4 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



புத்தகங்களை பரிமாறுவதை இயக்கமாக நடத்தி கொண்டுள்ளோம். நாம் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் தனிப்பட்ட முறையில் நமக்கும் சமூகத்துக்கும் பயனளிக்கும் சொத்தாக அமைகிறது. திராவிட இயக்கம் மட்டுமல்ல, திராவிட மாடல் அரசும் புத்தகங்கள் எல்லோர் கைகளுக்கும் கொண்டு சேர்க்க ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.


இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் கன்னிமாரா நூலகத்ததின் ஒரு பகுதியில் தமிழக அரசால் நிரந்தர புத்தக கண்காட்சிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆண்டுதோறும் 27 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறோம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட இடங்களில் அறிவுலகம் அமைத்துள்ளோம். பழைய நூலகங்கள் புதுப்பித்துள்ளோம்.

அறிவாயுதம்



இரண்டு இளைஞர்கள் சந்தித்தால், என்ன புத்தகம் படிக்கிறோம் என பேச வேண்டும் புத்தகங்கள் பற்றி விவாதிக்கும் வகையில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப யுகத்தில் இணையம் வழியாக பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனாலும், ஒரு புத்தகத்தை கையில் ஏந்தி படிக்கும் அனுபவமே தனி சுகம் தான். புத்தகத்தில் புதிய வெளிச்சம் கிடைக்கும்.புதிய அறிவு கிடைக்கும். வெற்றி பெற வேண்டும் எனில் புத்தகம் என்ற அறிவாயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் பொது இடங்களில் புத்தகம் படிப்பதை பார்த்து இருப்போம். அந்த நிலை தமிழகத்தில் கிடையாது. அந்த நிலை தான் இங்கு வர வேண்டும். போராடி போராடி முன்னேறியுள்ளோம். இங்கிருந்து முன்னே செல்ல வேண்டும். நம்மை வீழ்த்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement